தமிழ்நாடு

சிஏஏ போராட்ட வழக்குகள், ஊரடங்கு மீறல் வழக்குகள் ரத்து - முதல்வர் பழனிசாமி

சிஏஏ போராட்ட வழக்குகள், ஊரடங்கு மீறல் வழக்குகள் ரத்து - முதல்வர் பழனிசாமி

webteam

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதையடுத்து காவல்துறையினர் மாநிலம் முழுவதும் சோதனைச்சாவடிகள் அமைத்தும், வாகனத் தணிக்கை செய்தும் ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

மேலும், ஊரடங்கை மீறியவர்கள், வதந்திகளை பரப்பியவர்கள் ஆகியோர் மீது சட்டப்படியாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்படி சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இபாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது.

அதேபோல் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதையடுத்து மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கைவிடப்படுகிறது. இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் காவல்துறையினரை பணிசெய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்.