ஈரோடு மாவட்டம் பவானியில் தொழிலதிபர் கடத்தல் சம்பவத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் தொழிலதிபர் ஒருவரை கடத்தல் கும்பல் காரில் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பவானி காவல்துறையினர் கடத்தல் கும்பலை விரட்டிச் சென்றுள்ளனர். கடத்தல்காரர்கள் சேலத்தை நோக்கி சென்றதால், சேலம் அன்னதானப்பட்டி காவலர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால், கடத்தல்காரர்கள் சுதாரித்துக்கொண்டு நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே வந்தபோது பாதையை மாற்றி காரை ஓட்டிச் சென்றனர். இருப்பினும் விரட்டிச் சென்ற பவானி காவல்துறையினர் அலவாய்பட்டி கிராமத்தில் கடத்தல்காரர்களை சுற்றிவளைத்தனர். அப்போது கடத்தல்காரர்கள் காரில் இருந்து பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
ஆனால் அவை வெடிக்காததால் காரில் இருந்து இரண்டு பேர் இறங்கி வந்து அரிவாளால் காவல்துறையினரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு காவலர்கள் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காட்டுக்குள் தப்பியோடிய பிரேம்குமார், இளங்கோ ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். காரில் தப்பிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.