தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வுகள்: 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளுக்கு அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள்

Sinekadhara

ஊரடங்கு தளர்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் விதிமுறைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடந்த மே 24 முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து மே 31, ஜூன் 7, ஜூன் 14-ம் தேதி என 3 கட்டமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளும் மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அதிகமான தளர்வுகளும் அளிக்கப்பட்டன. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 21) முடிவடைகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் பாதிப்பு மற்றும் தொற்று எண்ணிக்கையை வைத்து தளர்வுகள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் விதிமுறைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கிடையேயும் பொது போக்குவரத்து வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.


அதேபோல் மெட்ரோ ரயில்களிலும் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.