119 நாட்களுக்குப் பிறகு தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது
கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏப்ரல் மாதம் இறுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தினமும் 450 பேருந்துகள் இயங்கி வந்தன. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினமும் 250 பேருந்துகள் தமிழகத்திற்கு இயங்கி வந்தன.
இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து கர்நாடக மாநில அரசு, தமிழகத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என நேற்று அறிவித்தது.
இந்நிலையில் 119 நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் இருந்து இரு மாநில பேருந்து போக்குவரத்து துவங்கியதால் தினமும் பெங்களூருவிலிருந்து, ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் அதிகாரிகளும் பணியாளர்களும் அதேபோன்று தமிழகத்தில் இருந்து பெங்களூருவில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு சென்று வரும் தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் தொழிலாளர்கள், மற்றும் இதர பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.