தமிழ்நாடு

சென்னையில் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி - அமைச்சர் உறுதி

Rasus

சென்னையில் 15 முதல் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் ஷேர் ஆட்டோ பயணத்தை நோக்கிச் செல்கின்றனர்.

சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்கள் இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் ஊதியம் வழங்கப்பட்டு விடும் நிலையில் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று இரவுக்குள் சம்பளம் வழங்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். சென்னை மாநகரில் 3,200 பேருந்துகளில் 15 முதல் 20 சதவீதம் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இயக்கப்படும் குறைவான பேருந்துகளில் கூட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதேநேரம், பட்டினம்பாக்கம், பெரம்பூர், அயனாவரம், அண்ணாநகர், குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அத்துடன் ரயில் பயணம், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட மாற்று வழிகளை பயணிகள் தேடி அலைகின்றனர். இதனால் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாவும், நேர விரயம் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர்.

இதனிடையே போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று விடுமுறை என்பதால் ஊதியம் இன்று மாலை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். குறைவான ஊதியம் வழங்கப்படும் என்ற தகவல் பரவுவது வதந்தி எனவும் முழு ஊதியமும் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.