தமிழ்நாடு

பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கும் பேருந்து நடத்துநர்

பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கும் பேருந்து நடத்துநர்

Rasus

கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில் மதுரையில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் பயணிகளுக்கு தினசரி இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறார்.

தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மதிய நேரங்களில் வெளியில் செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் குடை, தண்ணீர் பாட்டில்கள் தேவைப்படுகிறது. அந்தளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. பேருந்துகளில் செல்லும்போது சில நேரங்கள் தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனால் குடிப்பதற்கு அந்த நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் மயக்கமே வந்துவிடும் அளவிற்கு உடல் சோர்வு ஏற்படும். இந்நிலையில் மதுரையில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் பயணிகளுக்கு தினசரி இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறார். இதனால் அந்த பேருந்தில் பயணிக்கும் பயணிகளும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மதுரை- தஞ்சை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றுபவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த திருஞானம். வயது 45. இவர் தனது பேருந்தில் பயணிக்கும் பயணிகள் குடிநீர் இன்றி சிரமப்படக் கூடாது என்பதற்காக புதிய முயற்சி எடுத்துள்ளார்.

அதாவது தினசரி கிட்டத்தட்ட 1லிட்டர் 2லிட்டர்கள் தண்ணீர் கேன்களில் 20 சுமார் கேன்களை வீட்டிலிருந்தே நிரப்பி பேருந்துக்குள் வைத்துவிடுகிறார். மதுரை- தஞ்சை செல்வதற்கு கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் ஆகும். அந்த நேரத்தில் தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, தான் நிரப்பி வைத்திருக்கும் தண்ணீர் கேன்களை கொடுக்கிறார். இதனால் பயணிகளால் தண்ணீர் தாகமின்றி பயணிக்க முடிகிறது. முதியவர்கள், குழந்தைகளுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. திருஞானத்தின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.