தமிழ்நாடு

பொள்ளாச்சி: உயிர் பிரியும் நேரத்திலும் பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்!

பொள்ளாச்சி: உயிர் பிரியும் நேரத்திலும் பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்!

webteam

பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழந்தார். பேருந்திலிருந்த 34 பயணிகள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.

பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் மருதாச்சலம்(59). இவர் இன்று வழக்கம்போல் பணிக்கு வந்து போக்குவரத்து பணிமனை ஒன்றில் இருந்து ஜமீன் ஊத்துக்குளி, வக்கம்பாளையம் வழியாக இயக்கக்கூடிய "7A" என்ற எண் கொண்ட அரசு பேருந்தை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 5.50 மணியளவில் ஓட்டிவந்தார். 34 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்கரை சாலை வழியாக செல்லும்போது ஓட்டுனர் மருதாச்சலத்திற்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியதாகக் கூறப்படுகிறது.

ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முற்பட்டபோது அருகில் இருந்த ஒரு தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. பின்னர் ஓட்டுனரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மருதாச்சலம் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தன் உயிர் பிரியும் நேரத்திலும் பேருந்தில் இருந்த பயணிகளை காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்தை தடுப்புச்சுவரில் மோதி நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

மேலும் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதமே இருந்த நிலையில் ஓட்டுனர் மருதாச்சலம் உயிரிழந்தது சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.