தமிழ்நாடு

பாலத்தின் மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து – ஜன்னல் வழியாக குதித்து உயிர்தப்பிய பயணிகள்

பாலத்தின் மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து – ஜன்னல் வழியாக குதித்து உயிர்தப்பிய பயணிகள்

webteam

வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பாலத்தின் மீது மோதிய விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீப்பற்றி எரிந்து நாசமானது.

காஞ்சிபுரத்தில் இருந்து தனியார் பேருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் கிராம கூட்டுச்சாலை அருகே சென்று கொண்டிருந்த பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்றதால் பாலத்தின் மீது மோதிய விபத்தில் பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதையடுத்து பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக் கொண்டு முன்பக்க வாயில் வழியாகவும், சிலர் பேருந்தின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டும் கீழே குதித்து வேகமாக வெளியே தப்பித்து ஓடினர். இதில், 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், பேருந்து கொழுந்து விட்டு வேகமாக எறிய தொடங்கியது. இதையடுத்து தகவல் அறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், காயமடைந்த இருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.