வங்கியின் கட்டட அமைப்பை பற்றி நன்கு தெரிந்த யாரோதான் திருச்சி சமயபுரத்தில் நடந்த வங்கி கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் டோல்கேட் அருகே அமைந்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை முடிந்து பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையை திறந்த அதிகாரிகள், லாக்கர் அறையின் சுவரில் துளையிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவரில் துளை போடப்பட்டிருந்தது. அதன் வழியே உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வாடிக்கையாளர்களின் 5 லாக்கர்களை மட்டும் உடைத்திருந்தனர். 39, 114, 223, 299 மற்றும் 300 எண் கொண்ட லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தன.
கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் லாக்கரை உடைத்த கொள்ளையர்கள் அதிலிருந்த 500 சவரன் நகை மற்றும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்திருப்பதாக தெரிகிறது. இதுபற்றிய தகவல் அறிந்த விரைந்து வந்த காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
எப்படி நடந்தது கொள்ளை?
வங்கிக்குப் பின்புறம் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அதற்கும் வங்கிக்கும் ஒரே சுற்றுச்சுவர்தான். அதன் வழியாக வங்கி வளாகத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் மிகச்சரியாக லாக்கர்கள் இருந்த அறையின் சுவரை மட்டும் சுத்தியலை பயன்படுத்தி உடைத்துள்ளனர். துளையிடப்பட்ட இடத்திற்கு அருகில் முகமூடிகள், கேஸ் வெல்டிங் மெஷின் போன்றவை கிடந்தன. அதன் மூலம் இது முகமூடிக் கொள்ளையர்களின் கைவரிசை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் விடுமுறை விடப்பட்டிருந்ததால் கொள்ளை எப்போது நடந்தது எனத் தெரியவில்லை. கொள்ளை போன வங்கியில் காவலாளி இல்லை. கொள்ளையர்கள் மற்றொரு அறையில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கை எடுத்து சென்றுச்சென்றுள்ளனர்.
கொள்ளை குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, சுவரில் துளையிட்டு சரியாக லாக்கர் இருந்த பகுதிக்கு சென்றுள்ளனர். கேமராக்களின் ஹார்ட் டிஸ்கை போகும்போது எடுத்துச்சென்றுள்ளனர். வங்கியின் கட்டட அமைப்பை பற்றி நன்கு தெரிந்த யாரோதான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும். வங்கி ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், அடிக்கடி வங்கிக்கு வந்து செல்பவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நகைகளை கணக்கிடுவதில் தாமதம் ஏன்?
உடைக்கப்பட்ட லாக்கர்களிலிருந்த பொருட்களின் மதிப்பை துல்லியமாகக் கணக்கிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுரேஷ்குமார் என்பவர் சிங்கப்பூரில் இருப்பதால், அவரது 233 என்ற எண் கொண்ட லாக்கர் விவரங்களை கணக்கிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், உமா மகேஸ்வரி என்பவரது 114 என்ற லாக்கரில் இருந்த பொருட்களைக் கணக்கிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.