பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் மாயாவதி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை” - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு!

ஜெனிட்டா ரோஸ்லின்

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு இறுதிச்சடங்குகள் முடிந்த சூழலில், தற்போது பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்தவகையில், இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி உத்தரபிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார்.

இதனைதொடர்ந்து, பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்தினார். விசிக கட்சித் தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

பிறகு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி நேரில் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய மாயாவதி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மாயாவதி வலியுறுத்தினார்.

மேலும், “ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்; பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்:

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. இதில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளை பிடித்திருக்கலாம்.

உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு எங்களுக்கு நியாயம் அளிக்க வேண்டும்; பகுஜன் சமாஜ் கட்சி சோகத்தில் உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியினர் சட்டத்தை நமது கையில் எடுக்க வேண்டாம். மாநில அரசு ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். ஆம்ஸ்ர்டாங் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுனையாக இருக்கும்.” என்று பேசினார்.