வழக்கறிஞர் ஆனந்தன், விஜய் pt web
தமிழ்நாடு

“யானைகளை அகற்றுங்கள்.. இல்லையெனில் மேல்நடவடிக்கைதான்..” - தவெக-விற்கு புது சிக்கல்..!

PT WEB

கொடியேற்றும் விழாவில் விஜய்யின் பெற்றோர்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், இன்று கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெற்றது. இதற்காக தனது இல்லத்திலிருந்து ரசிகர்கள் புடைசூழ, பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விஜய் சென்றார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யானை உருவங்களுடன் கொடி

விழா மேடைக்குச் சென்ற விஜய் தலைமையில் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது அனைவரையும் நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி ஏற்குமாறு தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார். அதன்படி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பதாக விஜய் கட்சியினர் உறுதிமொழி எடுத்தனர்.

தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை போற்றுவோம். மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவோம். குறிப்பாக மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து மக்கள் நலச் சேவகராக கடமை ஆற்றுவோம்” என தமிழக வெற்றிக் கழகத்தினர் உறுதிமொழியேற்றனர்.

தவெக தலைவர் விஜய்

இதன் பிறகு கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் இருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில், வெற்றியை குறிக்கும் வாகை மலர் மற்றும் போர் யானைகள் உருவங்களும் இடம்பெற்றன. இதன் பின்னர் கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடியையும் விஜய் ஏற்றி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகம் கொடி ஏற்றிய விஜய்

இதையடுத்து ‘தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பிறக்குது...’ என தொடங்கும் கட்சி பாடலை விஜய் வெளியிட்டார்.

யானைகளை அகற்ற வேண்டும்

இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.

உண்மை இப்படி இருக்க, இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.