செய்தியாளர்: சார்லஸ்
2,000 பேர் வசிக்கும் கண்ணூத்து கிராமம் திருச்சி மணப்பாறை அருகில் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக தொலைத் தொடர்பு சேவை கிட்டாமல் இருந்து வந்துள்ளது இந்த கிராமம். அவசரத் தேவையை யாருக்கும் பகிர வேண்டும் என்றால் கூட 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவியர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 108 சேவையை பெற வேண்டுமென்றால் கூட சில கிலோ மீட்டர் தூரம் அவர்கள் பயணிக்க வேண்டியிருந்தது.
நான்கு புறமும் மலைகள் சூழ்ந்திருந்த இந்த கிராமத்தில் டவர்களை அமைக்க தனியார் செல்போன் நிறுவனங்கள் தயக்கம் காட்டின. தற்போது இந்த கிராமத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்காலிக செல்போன் கோபுரம் ஒன்றை அமைத்துள்ளது. செல்போன் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சி அந்த கிராம மக்களின் முகங்களில் தெரிகிறது.
கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்ட செல்போன் சேவைகளை இப்போது கண்ணூத்து மக்களும் பெற்று வருகின்றனர். புதிய உணர்வுடன் இருக்கும் இம்மக்கள் தற்காலிக செல்போன் கோபுரத்தை தங்களுக்கு நிரந்தரமாக்கி தர வேண்டும் என அரசை வேண்டுகின்றனர்.