தமிழ்நாடு

தமிழ் மந்திரம் ஒலிக்க கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு!

தமிழ் மந்திரம் ஒலிக்க கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு!

webteam

தஞ்சை பெரிய கோயிலில் வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜைகள் ஒன்றாம் தேதி தொடங்கியது. தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடந்த நிலையில் இன்று காலை சரியாக 9:21 மணிக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

புனிதநீர் ஊற்ற ஊற்ற கோயிலை சுற்றியிருந்த மக்கள் சாமியை தரிசித்து ஆசி பெற்றனர். பின்னர் கோயில் கலசங்களுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கோபுரத்தில் தமிழ் மந்திரம் ஒலிக்க ஓம் நமச்சிவாய நாமம் விண்ணை முட்டியது.

முன்னதாக தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு குடமுழுக்கு நடைமுறைகள் நடைபெற்றன. இந்த தேவாரம், திருவாசகத்தை கேட்க பிரத்யேக ஒலிப்பெருக்கி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

23 ஆண்டுகளுக்கு பிறகு பெருவுடையார் கோயிலுக்கு குடமுழுக்கு என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.