தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

webteam

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது பெயரிலும், அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும், தம்பி சேகர் பெயரிலும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூர் உட்பட 26 இடங்களில் சுமார் 13 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

நடந்துமுடிந்த இந்த சோதனையில் ரூ.25,56,000 ரொக்கம், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. அத்துடன் அவரின் அலுவலக வங்கி கணக்கையும் அவரது மனைவி வங்கிக் கணக்கையும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.