தமிழ்நாடு

தமிழகத்தில் சிக்கிய 600 ஒடிசா தொழிலாளர்கள்... துணிச்சலுடன் மீட்கப் போராடிய 19 வயது பெண்

தமிழகத்தில் சிக்கிய 600 ஒடிசா தொழிலாளர்கள்... துணிச்சலுடன் மீட்கப் போராடிய 19 வயது பெண்

webteam

தமிழகத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 600 ஒடிசா மாநிலத் தொழிலாளர்களை மானசி பாரிஹா என்ற இளம்பெண் மீட்டுள்ளது பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சொந்த ஊர் நண்பர்களுக்கு அவர் அனுப்பிய  வீடியோக்களும் புகைப்படங்களுமே அவர்களைக் காப்பாற்றியுள்ளது.    

தந்தை வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த மானசி, இடைத்தரகர் ஒருவரால் தமிழகத்துக்குக் அழைத்து வரப்பட்டார். இடைத்தரகரிடம் பெற்ற 28 ஆயிரம் ரூபாயைக் கொண்டு மனைவியின் மருத்துவச் செலவுகளுக்காக வாங்கிய கடனை அடைத்தார் மானசியின் தந்தை.   

தன் தந்தை மற்றும் பத்து வயது சகோதரியுடன் தமிழகம் வந்தார் மானசி.  அவருடன் பாலாங்கிர், நுவபாடா மற்றும் காலஹந்தி மாவட்டங்களைச் சேர்ந்த 355 தொழிலாளர்களும் வந்தனர். திருவள்ளூர் மாவட்டம், புதுப்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு அவர்கள் அழைத்துவரப்பட்டனர்.  

நிறைய பணம் தருவதாகக் கூறி அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள், தாங்கள் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். “செங்கல் சூளையில் அதிகாலையில் 4.30 மணிக்கு வேலையைத் தொடங்கிவிடுவோம். இரண்டு மணி நேரம் மட்டுமே ஓய்வு. பிறகு இரவு வரை அலுக்காமல் வேலைபார்க்கவேண்டும்” என்று பேசத் தொடங்குகிறார் மானசி. 

தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சம்பளமாக 250 முதல் 300 ரூபாய் வரைதான் வழங்கப்பட்டது. கணக்குப்பார்த்தால் ஒரு நாளைக்கு 30 ரூபாய். “ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று எனக்கும் என் தந்தைக்கும் ரூ.150 கொடுப்பார்கள். அதுதான் எங்களுடைய முழு வருமானம்” என்று ஏமாற்றப்பட்ட கதையை விவரிக்கிறார்.   

ஆறு மாதங்களாக நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சோர்வுற்ற தொழிலாளர்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் எண்ணம் வந்தது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்துள்ளனர். இரண்டு வாரத்திற்குள் குறிப்பிட்ட செங்கற்களைத் தயாரித்தால் மட்டுமே ஊருக்குச் செல்லலாம் என சூளை உரிமையாளர் உறுதியாக சொல்லிவிட்டார். சொன்னபடி வேலையையும் இரவுபகலமாக செய்துமுடித்தார்கள்.

ஆனாலும் அவரோ தொழிலாளர்களை ஊருக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. ஊரடங்கு நேரத்திலும் அவர்களை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் கோபமடைந்த ஒடிசா தொழிலாளர்கள் மே மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தைகளையும் பெண்களையும் மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார் சூளை உரிமையாளர்.

“பொறுமை இழந்த எங்கள் தொழிலாளர்கள் பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டனர். அதைப் பார்த்த உரிமையாளர் ஐம்பது பேரை துணைக்கு அழைத்துக்கொண்டு கம்புகளால் தாக்கினார். அதில் பலருக்கும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதில் என் சகோதரியும்கூட காயமடைந்தார்” என்கிறார் மானசி.  

இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்துகொண்ட மானசி, ஊடகங்களுடன் தொடர்புடைய சொந்த ஊர் நண்பர்களுக்கு ஃபோன் செய்து சம்பவங்களைச் சொன்னார். பின்னர் மானசி அனுப்பிய வீடியோக்களும் புகைப்படங்களும் அவரது நண்பர்கள் மூலம் சமூகவலைதளங்களில் பரவி வைரலானது. இந்த தகவல் திருவள்ளூர் மாட்ட நிர்வாகத்திற்குத் தெரியவர, காவல்துறையினர் விரைந்து வந்து தொழிலாளர்களைக் கைப்பற்றி அழைத்துச்சென்றனர்.  

செங்கல் சூளை உரிமையாளர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர்  மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மானசியின் துணிச்சலான செயல்பாட்டால் 600 தொழிலாளர்கள் நிம்மதியாக சொந்த ஊரில் இருக்கிறார்கள். கிராமத்திற்குத் திரும்பினாலும்கூட மானசிக்கு அன்றாட வாழ்க்கை கேள்விக்குறிதான். “எங்களைக் காப்பாற்றிக்கொள்ள தினமும் வேலை பார்த்துத்தான் ஆகவேண்டும். எங்களுக்கு வேலை வேண்டும்” என்று கேட்கிறார்.