தமிழ்நாடு

ஸ்மார்ட் போனில் மூழ்கும் சிறுவர்களுக்கு எழும் மனநல சிக்கல்கள் - எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஸ்மார்ட் போனில் மூழ்கும் சிறுவர்களுக்கு எழும் மனநல சிக்கல்கள் - எச்சரிக்கும் மருத்துவர்கள்

kaleelrahman

கொரோனா காலகட்டத்தில் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் பிள்ளைகள் கையில், படிப்புக்காக ஸ்மார்ட்போன்கள் திணிக்கப்பட்டதன் விளைவு, பல சிறுவர்கள் மனநல மருத்துவரை நாட வேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த 15 வயதாகும் சிறுவன் ஒருவனுக்கு, பெற்றோர் முதன்முறையாக ஸ்மார்ட்போனை வாங்கிக் கொடுத்துள்ளனர். வாங்கித்தந்த 6 மாதங்களில் சிறுவன் தினமும் 7 மணிநேரம் ஸ்மார்ட்போனில் செலவழித்திருக்கிறான். அதன் பின்னர், சிறுவனின் நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, தூக்கமின்மை, சமூக தொடர்புகளில் இருந்து விலகல், படிப்பில் தோல்வி, மற்றும் கடும் கோபம், எரிச்சல் என்று இருந்த சிறுவனை, அவரது பெற்றோர் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, சிறுவன் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருப்பது தெரியவந்துள்ளது. இச்சிறுவனை போன்று நாடு முழுவதும் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறும் மனநல மருத்துவர்கள், வாரத்துக்கு 10 சிறார்களாவது மனநல ஆலோசனைக்கு வருவதாக கூறுகிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவதால் வெளியே சென்று விளையாடுவதை குழந்தைகள் தவிர்ப்பதாகவும், உறவினர்கள் வந்தாலும் செல்போனிலேயே இருப்பதாகவும் பெற்றோர் தெரிவிக்கிறார்கள்.

அனைத்திந்திய கேம் கூட்டமைப்பின் கணிப்புபடி சுமார் 300 மில்லியன் ஆன்லைன் கேம் விளையாட்டாளர்கள் இந்தியாவில் உள்ளனர். அகில இந்திய கேமிங் ஃபெடரேஷனின் கூற்றுப்படி, இந்தியாவில் 2023-க்குள் ஆன்லைன் கேமிங் தொழில் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் கேமிங் தொழில் செழிக்கும் நிலையில், கல்வி கற்கும் பருவத்தில் இருக்கும் மாணவர்களின் கற்றல்திறனை குறைத்து, அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டியதும் கட்டாயமாகிறது.