திருநின்றவூரில் கருத்து வேறுபாடு காரணமாக காதலி பேச மறுத்ததால், காதலர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை திருநின்றவூர் பெரியார் நகரில் திருவள்ளுவர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். செந்தில்குமாரும் அவர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செந்தில்குமாருக்கும், இளம்பெண்ணுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, செந்தில்குமாரிடம் கடந்த 4 நாட்களாக அப்பெண் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று செந்தில்குமாரின் பெற்றோர் திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். பின்னர், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அந்தநேரத்தில் இன்று காலை செந்தில்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருநின்றவூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்தி: 'மதம் மாறிவிடுவாரோ': மனைவியையும், குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்