யூடியூபர் சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த பேச்சுக்கு கைது செய்யப்பட்டார். அது முதல், எஸ்.பி. வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் விமர்சித்தனர். இதுதொடர்பாக, ஆபாச கருத்து பதிவிட்ட விவகாரத்தில், பள்ளி மாணவர் ஒருவரும் சிக்கினார்.
மாணவனை அவரது தாயுடன் அழைத்துவந்த காவல்துறையினர், பெண் அதிகாரி ஒருவர் மூலம் விசாரித்தனர். அப்போது, தான் செய்தது தவறு என மாணவர் ஒப்புக்கொண்டார். மேலும், மகனிடம் இருந்து செல்போனை வாங்கி விடுவதாக அவர் கூறினார். மாணவனின் தாயிடம் பேசிய எஸ்.பி. வருண்குமார், செல்போனை பறிப்பது தீர்வல்ல என்றும், மனதளவில் மாற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மாணவனுக்கு ஒரு சகோதரி இருப்பதையும், பயிலும் இடங்களில் பெண்கள் இருப்பதையும் எடுத்துக் கூறினார். பள்ளியில் முதல் மாணவனாக இருக்கும் அந்த சிறுவனை அழைத்துச் செல்லுமாறு வழியனுப்பிய எஸ்.பி. வருண்குமார், ஆபாச கூட்டத்தின் தாக்குதலால் பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டிருக்கிறது என்றார்.