தமிழ்நாடு

சுவர் ஏறிக்குதித்து விளையாட சென்ற சிறுவன்.. உயரழுத்த மின் கம்பி உரசியதில் நேர்ந்த பரிதாபம்

சுவர் ஏறிக்குதித்து விளையாட சென்ற சிறுவன்.. உயரழுத்த மின் கம்பி உரசியதில் நேர்ந்த பரிதாபம்

webteam

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல் ஆலை சுவரை எட்டி குதித்து விளையாட சென்றபோது உயரழுத்த மின் கம்பியில் உரசியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணம் கிறிஸ்துராஜா தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மகன் நிகிலன்(15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10வது வகுப்பு படித்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் நான்கு பேர் உட்பட ஐந்து பேரும் மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலை குடியிருப்பு பகுதியில் விளையாட செல்வதற்காக மணல் ஆலை மதில் சுவர் மீது ஏறியுள்ளனர்.

நண்பர்கள் நால்வரும் சுவர் ஏறி குதித்து குடியிருப்பு பகுதிக்குச் சென்ற நிலையில், நிகிலன் மதில் சுவர் மீது ஏறி வரும்போது, சுவரின் மேலே சென்று கொண்டிருந்த உயரழுத்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். நிகிலனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி உடனடியாக அங்கு வந்து சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை ஜேம்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மணவாளக்குறிச்சி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.