திருச்சி அருகே பலூனை பிடிக்க சென்ற சிறுவன் பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே பழைய பால்பண்ணை அருகே சவுக்கியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோவாஸ். இவர் பெரம்பலூரில் உள்ள எம்ஆர்எப் டயர் நிறுவனத்தில் தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் ஜோசல் டெய்சன். திருச்சி தனியார் பள்ளியில் ஆன்லைன் மூலம் எல்கேஜி பயின்று வந்தார்.
இவர்கள் வசிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தின் ஒருவரது வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கோவாஸ் குடும்பத்தோடு கலந்து கொண்டார். அப்போது மாடியின் வெளிப்புறத்தில் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. அதை பால்கனி வழியாக பிடிக்க முயற்சித்த சிறுவன் ஜோசல் டெய்சன், எதிர்பாராதவிதமாக முதல் தளத்திலிருந்து தவறி தரையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி காந்தி மார்க்கெட் காவல் துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மகன் கண் முன்னே விழுந்து உயிரிழந்ததால் பெற்றோர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.