மதுரையில் மர்மமாக இருந்து புதைக்கப்பட்ட பெண் குழந்தையை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சேடபட்டியைச் சேர்ந்த தம்பதியினர் சூர்யபிரபா - முத்துப்பாண்டி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் உடல் நலக்குறைவால் பிப்ரவரி 15ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி, மறைமுகமாக புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போடச்சென்ற கிராம செவிலியர் மீனாட்சியிடம் குழந்தை இறந்துவிட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர். சந்தேகமடைந்த கிராம செவிலியர், கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரதாஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சேடபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று பேரையூர் வட்டாட்சியர் சாந்தி, காவல் ஆய்வாளர் ஜெயப்பிரியா மற்று மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினர் குழந்தை புகைப்பட்ட இடத்தை தோண்டினர். மேலும் புதைக்கப்பட்ட உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் பெண்சிசுக்கொலை என தகவல் தெரியவந்ததாக கூறப்படுகிறது.