சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

”சென்னையில் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி; பொதுமக்கள் அச்சப்படவேண்டாம்” - காவல்துறை

இன்று காலை சென்னையில் அண்ணாநகர் சாந்தோம், பெரம்பூர், எழும்பூர் என பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த தனியார்பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்.

PT WEB

இன்று காலை சென்னையில் அண்ணாநகர் சாந்தோம், பெரம்பூர், எழும்பூர் என பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த தனியார்பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, சென்னை பரபரப்படைந்தது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்களை பள்ளிநிர்வாகம் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

வெடிகுண்டு நிபுனர்கள், மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு மிரட்டல் விடுத்த பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை போலிசார் தேடிவருகின்றனர்.

சென்னை காவல்துறை (தெற்கு) கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

இதுகுறித்து சென்னை காவல்துறை (தெற்கு) கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளார்களிடம் பேசுகையில் “இதுவரை 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது வெறும் புரளி தான் பொது மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “சென்னை காவல் எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த புரளிக்கு பொதுமக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.

ஒரே இமெயிலில் இருந்து தான் அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த இமெயில் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இது வரை 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டல் காலை 10.30 மணி முதல் வர தொடங்கியது. சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மிரட்டல் வந்த இமெயிலில் எந்த ஒரு கோரிக்கையும் நிபந்தனைகளும் குறிப்பிடப்படவில்லை. தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகள் சோதனை மேற்கொண்டு வருகிறோம்,

மேலும், மிரட்டல் வராத பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு முன்னதாக சென்னை எலியட்ஸ் கடற்கரை பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. பொது மக்கள் பதட்டமடைய வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அவர் கூறினார்.

“ஐபி முகவரியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை”

மிரட்டல் இ -மெயில் அனுப்பியவரின் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. குற்றவாளி பயன்படுத்திய அங்கீகரிக்கப்படாத தனியார் நெட்வொர்க் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐபி முகவரி இருந்ததால் தான் இ-மெயில் அனுப்பியவர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும் என்பதால் சைபர் கிரைம் வல்லுநர்கள் உதவியுடன் ஐபி முகவரியை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.