தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் pt desk
தமிழ்நாடு

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனைக்குப் பின் புரளி என போலீசார் தகவல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போபதாக இருவர் பேசிக் கொண்டிருந்தனர் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை குரோம்பேட்டை, ராஜேந்திர பிரசாத் சாலை, நேரு நகரில் இயங்கி வரும் என்.எஸ்.என் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட பள்ளியின் முதல்வர் கவிதா, சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு பள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.

என்.எஸ்.என் பள்ளி

சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதே பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பணம் கேட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தாம்பரம் ரயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட குமார் என்ற நபர், தான் ரயிலில் பயணிக்கும் போது, தாம்பரம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் பகுதியில் பாம் வெடிக்கும் என இருவர் பேசிக் கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் சோதனை

இதையடுத்து தாம்பரம் இருப்புப்பாதை போலீசார், ஆர்பிஎப் காவல் துறையினர் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் புரளி என தெரியவந்தது. இந்நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.