நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 7 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால் இங்கே மின் உற்பத்தி வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனிடையே மத்திய அரசு பொது முடக்கத்திற்கான விதிமுறைகளைத் தளர்த்தியதால் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
இந்நிலையில் இங்கு செயல்பட்டு வந்த இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று திடீரென்று பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 7 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் மூலம் கிடைத்துள்ளது. இதனால் ஒட்டு மொத்தமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.