தமிழ்நாடு

``ரவி என்றால் சூரியன்; ஆளுநர் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது”- தருமபுரம் ஆதீனம்

``ரவி என்றால் சூரியன்; ஆளுநர் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது”- தருமபுரம் ஆதீனம்

நிவேதா ஜெகராஜா

தருமபுரம் ஆதீனத்தின் பவள விழா நினைவு கலையரங்கத்திற்கு இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அடிக்கல் நாட்டினார். அப்போது ஆதீனம் சார்பில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தெலங்கானா செல்லும் ஞானரத யாத்திரையை தொடங்கி வைத்தார் ஆளுநர். தருமபுரம் ஆதீனத்தில் அருங்காட்சியகத்தையும் தொடங்கி வைக்கிறார் ஆளுநர்.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞான ரத யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதீன திருமடத்தில் யாத்திரை ஊர்தியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

முன்னதாக நடைபெற்ற விழாவில் வாழ்த்துரை வழங்கி பேசிய தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் கூறுகையில், “ரவி என்றால் சூரியன் என்று பொருள். தமிழகத்தில் ஆளுகின்ற கட்சியின் சின்னமும் உதயசூரியன்தான். உலகுக்கெல்லாம் ஒரு சூரியனாக இருந்தாலும்கூட, தமிழகத்தில் மட்டும் இரண்டு சூரியன்கள் ஒருமித்து இருப்பதையே நமக்கு இந்நிகழ்வு காட்டுகிறது. இது தெய்வ செயலாகும். ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருடன் இணக்கமாக செல்ல வேண்டும்” என பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ரவி தருமபுரம் ஆதீனத்தில் நுழையும்போதே உடலில் ஒரு அதிர்வு ஏற்படுவதாகவும் தருமபுரம் ஆதீனம் பல கல்வி சேவைகளை ஆற்றி வருவதாகவும், இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகையே இந்தியாவே வழிநடத்தும் அதற்கு ஆன்மீகமே உறுதுணையாக இருக்கும். அந்த ஆன்மீகத்தை வளர்ப்பதில் தருமபுரம் ஆதீனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேசினார்.