தமிழ்நாடு

'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி

'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி

webteam

தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...!

கேள்வி: நீங்கள் அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறீர்கள். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்?

கிஷன் ரெட்டி: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டணி கட்சியான அதிமுக 5 வருடமாக தமிழகத்தை சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறது. கூடிய விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.

கேள்வி: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?

கிஷன் ரெட்டி: தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்துவோம். அனைவரையும் ஒருங்கிணைத்து, யாரும் வெளியே செல்லாத வகையில் சிறப்பான ஒரு கூட்டணியை அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: எத்தனை தொகுதிகளை அதிமுகவிடம் கேட்க வேண்டும் என, பாஜக தலைமை அறிவுத்தல்கள் ஏதேனும் வழங்கியிருக்கிறதா?

கிஷன் ரெட்டி: நாங்கள் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பாஜக தலைமையே அது குறித்து முடிவெடுக்கும். மாநில தலைவர்களுடன், தேசிய தலைமை ஆலோசனை செய்தபின்னரே, இறுதி முடிவு எடுக்கப்படும்.