தமிழ்நாடு

கர்நாடகாவில் தமிழக பெண், பிறந்த இரட்டை குழந்தைகள் பலியான சோகம் - அண்ணாமலை கண்டனம்

கர்நாடகாவில் தமிழக பெண், பிறந்த இரட்டை குழந்தைகள் பலியான சோகம் - அண்ணாமலை கண்டனம்

சங்கீதா

ஆதார் அட்டையும், தாய் அட்டையும் இல்லாததால் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கர்நாடக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காததால் வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து சிறிது நேரத்திலேயே தாயும் 2 சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளநிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. 30 வயதான இவர், தனது கணவர் மற்றும் 5 வயது பெண் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் தும்கூரு டவுன் பாரதிநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கஸ்தூரியின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் தனியாக இருந்த கஸ்தூரி, மற்றொரு பெண் உதவியுடன் அங்கு இருந்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரி நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தும்கூர் அரசு மருத்துவமனைக்கு அங்குள்ள தெரிந்தவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு சென்றதும் அங்கு மருத்துவமனையில் பணியிலிருந்து மருத்துவர் உஷா என்பவர் கர்ப்பிணி பெண்ணிடம் தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை கேட்டுள்ளார். இரண்டு அட்டைகளும் கஸ்தூரியிடம் இல்லாத காரணத்தால் அவரை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஆனால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாததால் கஸ்தூரி மீண்டும் வீட்டுக்கே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

அதிக ரத்தப்போக்கு காரணமாக தாயும் உயிரிழக்க அடுத்தடுத்த சில நிமிடங்களில் இரட்டை ஆண் குழந்தைகளும் உயிரிழந்தன. ஒரே நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மருத்துவர் மஞ்சுநாத் நேரடியாக சென்று பார்வையிட்டார். அப்போது அங்கிருந்து பொதுமக்கள் மருத்துவரின் கவன குறைவால் தான் இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது என நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மருத்துவர் மஞ்சுநாத் அளித்த தகவல்களின் அடிப்படையில் பணியிலிருந்த அரசு மருத்துவர் உஷா மற்றும் அங்கு பணியில் இருந்த இரண்டு செவிலியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணி ஒருவர் கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படாததால் வீட்டிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது.

இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்" என்று அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.