உமா கார்கி கோப்புப்படம் - PT Desk
தமிழ்நாடு

கோவை: திமுகவினர் மீது அவதூறு கருத்துகளை பதிவிட்டு கைதான பாஜக பெண் பிரமுகருக்கு ஜாமீன்!

திமுக மற்றும் திமுக தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவு செய்ததாக கைதான பாஜக ஆதரவாளர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

webteam

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன் (56). பாஜக ஆதரவாளரான இவர், உமா கார்க்கி என்ற பெயரில் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். அதேபோல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்தும் விமர்சன பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார்.

உமா கார்கி

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து உமா கார்த்திகேயன் சமூகவலைதளப் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஹரீஷ் என்பவர் கோவை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், சைபர் கிரைம் காவல் துறையினர் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து உமா கார்த்திகேயனை கடந்த மாதம் 20ஆம் தேதி கைது செய்தனர்.

தொடர்ந்து 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட உமா கார்த்திகேயன், சென்னை வழக்கு தொடர்பாகவும் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை, கோவை என இரு மாவட்ட வழக்குகளிலும் பிணை கிடைத்ததால், உமா கார்த்திகேயன் கோவை மத்திய சிறையிலிருந்து விடுதலையானார்.