மு.க.ஸ்டாலின், நாராயணன் திருப்பதி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

இந்தி மாத கொண்டாட்டம்| பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.. கேள்வி எழுப்பும் பாஜக!

இந்தி மாத நிறைவுவிழா கொண்டாட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Prakash J

'டிடி தமிழ்' சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இந்தி மாத நிறைவுவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ’தெக்கணும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. தொடர்ந்து டிடி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமும் மன்னிப்பு கேட்டுள்ளது. என்றாலும், இவ்விவகாரம் விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், இந்தி மாத நிறைவுவிழா கொண்டாட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாராயணன் திருப்பதி தன்னுடைய அறிக்கையின் தொடக்கத்தில், “ ‘மாண்புமிகு பிரதமர் அவர்களே.... நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை. பன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிறமொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும். இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என அதில் முதல்வர் கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைன் போர்|’ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்’- தென்கொரியா குற்றச்சாட்டு

மேலும் அவர் அதில், “நான் கேட்கிறேன், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, 2004-2014 வரை காங்கிரஸுடன் இணைந்து நீங்கள் மத்தியில் ஆட்சி செய்தபோது, ​​தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் இதே நாட்களில் உங்கள் அரசால் இந்தி மாதம் கொண்டாடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏதேனும் ஒருமொழிக்கு தேசிய மொழி அந்தஸ்தை வழங்கியிருந்ததா? இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடி உங்கள் கட்சியும் உங்கள் அரசும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை இழிவுபடுத்தியதாகச் ஒப்புக்கொள்கிறீர்களா?

மத்தியில் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று நீங்கள் எப்போதாவது கோரியிருக்கிறீர்களா அல்லது பரிந்துரைத்திருக்கிறீர்களா? அல்லது உங்கள் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்திக்குப் பதிலாக தமிழ் மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்த முயற்சி எடுத்தீர்களா? அல்லது ஊக்குவிக்கக் கோரினீர்களா என்பதைத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் டெல்லியில் ஆட்சியில் இருந்தால் இந்தியை வரவேற்று ஊக்குவிப்பதையும், டெல்லியில் எதிர்க்கட்சியாக இருந்தால் இந்தியை வெறுப்பதையும் உங்களின் இந்தப் பதிவு தெளிவாக எடுத்துரைக்கிறது. உங்களின் இந்தச் சந்தர்ப்பவாத அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர்| ”முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” - பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தல்!