தமிழ்நாடு

மாரிதாஸ் கைதை கண்டித்து மதுரையில் பாஜகவினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

மாரிதாஸ் கைதை கண்டித்து மதுரையில் பாஜகவினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

webteam
மாரிதாஸ் கைதை கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
யூடிப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதால் அவர் மீது  நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம் காவல்துறையினரிடம்  அளித்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு வரும் 23 ஆம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாரிதாஸை கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, கூட்டத்தை கூட்டி தொற்று பரவலுக்கு வழிவகுத்தது உள்ளிட்ட 6பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர் பாஜக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் மற்றும் பாஜகவினர் 50பேர் மீது திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் யூடியூப்பர் மாரிதாஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசு கருத்துரிமையை நசுக்குவதாக கூறியும், பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் மதுரை மாநகர பாகவினர் மற்றும் நிர்வாகிகள் பீபீகுளம் உழவர் சந்தை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
மேலும் போராட்டத்தில் “நடப்பது சட்ட ஆட்சியா, சர்வதிகார ஆட்சியா? திமுக அரசு ஒழிக” என்ற பதாகைகளை ஏந்தி கண்டனம் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.