வளசரவாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் காவலரிடம் பிரச்னையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஸ்ரீலட்சுமி என்ற பெண் காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியாக வந்த ஒரு நபர், எதற்காக வாகன சோதனை செய்யப்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ‘நான் யார் தெரியுமா? டெல்லி வரை எனக்கு அதிகாரம் உள்ளது. காலையில் நீங்கள் பணியில் இருக்க மாட்டீர்கள்’ என பெண் காவலரை மிரட்டியுள்ளார் அந்த நபர். இதையடுத்து அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர் ஜோதி முருகனுக்கு, ஸ்ரீலட்சுமி தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்து ஜோதி முருகன் விசாரிக்க, அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த நபர். வாக்குவாதத்தில் ஜோதி முருகன் தாக்கப்பட்டுள்ளார். ஒருவழியாக அந்த நபரை கைது செய்து, அழைத்துச்சென்றுள்ளனர். அவர் மதுபோதையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், அவர் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பிர் சுரேஷ் கண்ணா (35) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், அரசு ஊழியரை தாக்குதல், பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.