செய்தியாளர்: விக்னேஷ்முத்து
பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று காலை ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக கேசவன் நியமனம் செய்யப்பட்டதற்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து சி.ஆர்.கேசவன் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்...
“இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். பார்த்தசாரதி கோயில் பிரசாதம் மற்றும் ஆசீர்வாதத்துடன் நமது தென்சென்னை வெற்றி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை பார்க்க வந்துள்ளோம். கோவில் பிரசாதம் என்றால் இங்குள்ள தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வெறுப்பு என சொல்லலாம். ராமர் கோவிலை எப்படி எதிர்த்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தின் மாநில அரசின் அதிகார சின்னமே கோவில் கோபுரம்தான்.
கூகுளில் தேடினால் கூட இப்படியொரு வேட்பாளர் தென் சென்னைக்கு கிடைக்க மாட்டார். அவ்வளவு திறமையான மக்கள் மீது உண்மையான அன்பையும் அக்கறையும் கொண்டவர் தமிழிசை சௌந்தரராஜன். அவர், மிகப்பெரிய ஆளுநர் மாளிகையை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக வந்தவர். காமராஜருக்குப் பிறகு எளிமையாக இருக்கக் கூடியவர்.
திமுக என்ற வைரஸ் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள் தமிழக மக்கள். கொரோனா பெருந்தொற்று வந்த போது பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி கொடுத்து மக்களை எப்படி காப்பாற்றினாரோ அதேபோல், தி.மு.க. வைரஸை தோற்கடிக்க பிரதமரால் அனுப்பி வைக்கப்பட்டவர் தமிழிசை சௌந்தரராஜன். தாமரை கண்டிப்பாக தமிழகத்தில் மலரும். தென் சென்னையில் தாமரை மலர்ந்தே தீரும்” என்றார்.