செந்தில் பாலாஜி - பாஜக வானதி முகநூல்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி பிணை: “குற்றம்சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரிய அதிகாரத்திலிருந்தாலும்..” பாஜக MLA வானதி

செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டது குறித்து பாஜக வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணை குற்றவாளியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் மூன்று நிபந்தனைகளுடன் கூடிய பிணையை அவருக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது உச்சநீதிமன்றம்.

தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் தொகுதியான கரூரில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் அப்பகுதி மக்கள். மேலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ”சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், செந்தில் பாலாஜியின் பிணை குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், ”குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அதிக நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் காரணத்தால் சாட்சிகளை கலைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தது. தற்பொழுதும் உள்ளது. சொல்லப்போனால் தற்பொழுது தமிழக அரசின் முழு ஆதரவோடு சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே, நிபந்தனை ஜாமீனில் அவர் (செந்தில் பாலாஜி) வந்தால் கூட தீவிரமாக அவரை கண்காணிக்க வேண்டும்.

தமிழக அரசு ஊழல் மற்றும் லஞ்ச புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனில், இவ்வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க குற்றவாளி தரப்பிலிருந்து ஒத்துழைப்பு வழங்கப்பட ஏற்பாடு செய்யவேண்டும்.

தமிழக மக்கள் இவ்வரசு நேர்மையான அரசாக இருக்கும் என்று நினைத்துதான் வாக்களித்தார்கள். ஆனால், தமிழக அமைச்சரவையிலே பல்வேறு நபர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு நிலைவையில் உள்ளது, நடந்து கொண்டும் உள்ளது.

எனவே, இதனை கருத்தில் கொண்டும் ‘ஊழலுக்கு எதிராக நான் இருக்கிறேன்’ என்று தமிழக மக்களுக்கு நிரூபிக்கும் வகையிலும் முதலமைச்சர் செயல்பட வேண்டும். அதுவே எங்களின் எதிர்ப்பார்ப்பு.

குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரிய அதிகாரத்திலிருந்தாலும் மத்திய அரசின் அமைப்புகள் தங்களின் பணிகளை சரியாக செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவ்வழக்கு ஓர் உதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.