வானதி சீனிவாசன், கௌதமி pt web
தமிழ்நாடு

“பாஜகவில் இருந்ததால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா?”-கௌதமி விலகல் குறித்து வானதி சீனிவாசன்கேள்வி

Angeshwar G

பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டை கட்டமைக்கவேண்டும் என்ற நோக்கத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த தனக்கு கட்சியிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி மோசடி செய்தும், அவருக்கு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் கட்சிப் பணி ஆற்றியும் சீட் கிடைக்கவில்லை. மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நடிகை கௌதமி அளித்த புகாரின்பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்துகளை அபகரித்ததாக கடந்த மாதம் கௌதமி புகார் அளித்த நிலையில், அவர்கள்மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், “நடிகை கௌதமி பாஜகவில் இருந்த காரணத்தினால் தான் அவருடைய புகார்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “கௌதமி மீது அன்பு, பாசம், மரியாதை உண்டு கட்சியில் தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்ணாக இருந்தார். கட்சியை நேசிக்க கூடிய பெண்ணாக இருந்தார். அவர் கடிதம் அளித்து இருப்பது மன வேதனையாக இருக்கிறது. மகளிர் அணியில் இணைந்து பணியாற்ற அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் மாநிலத்தில் வேலை செய்வதாக சொல்லி இருந்தார். மாநில பணிகளில் அவருடன் பேச ,பழக வாய்ப்பு குறைந்து போனது.

தான் ஒரு சினிமா நட்சத்திரம், தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எப்பொழுதும் நினைக்காதவர். கட்சியின் அடிப்படை தொண்டராக இருந்தவர். அவர் கடிதம் மன வேதனையை கொடுக்கிறது. தனிப்பட்ட பெண்மணியாக அவர் எதிலும் சோர்ந்து போகக் கூடிய ஆள் கிடையாது. தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்மணி. ஒரு வழக்கு தொடர்பாக கட்சியில் ஒரு சிலரை பாதுகாப்பாத சொல்லி இருக்கின்றார். முழுமையான தகவல் தெரியவில்லை.

பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கௌதமி !

கட்சிக்காரர்களை யாரும் சட்டத்திற்கு புறம்பாக பாதுகாக்க போவதில்லை. மாநில தலைவரிடம் முழுமையாக சொல்லி இருக்கலாம். உதவி செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். மாநில அரசு புகார் கொடுத்து இத்தனை நாள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். பாஜகவில் இருந்ததால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா? ராஜினாமா கடிதம் கொடுத்தவுடன் புகார் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். கட்சியை விட்டு வந்தால்தான் வழக்கு பதிவு செய்யப்படும் என சொல்லி நெருக்கடி கொடுத்தார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.