வானதி சீனிவாசன், முதல்வர் மு.க.ஸ்டாலின் pt desk
தமிழ்நாடு

“கோவையை கவர முயற்சிக்கிறார் முதல்வர் ; 2026 தேர்தலில்தான் அதற்கு பலன் தெரியும்”- MLA வானதி சீனிவாசன்

“கோவையை கவர முதல்வர் முயற்சி செய்கின்றார். கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026 தேர்தலில் தெரியும்” என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

கோவையில் கடந்த இரு தினங்களாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

முதல்வர் மு.க.ஸ்டாலின்

“விஸ்கர்மா யோஜானா திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்த வேண்டும்”

“நிறைய அறிவிப்புகளை முதல்வர் கொடுத்து இருக்கின்றார். சின்னியம்பாளைம் முதல் நீலாம்பூர் வரை பாலத்தை நீடிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் ஏற்கெனவே பேசி இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பை முதல்வர் கொடுத்து இருக்கிறார். தங்க நகை பூங்கா என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பும் இங்கே கொடுத்திருக்கிறார். முதல்வரிடம் விஸ்கர்மா யோஜானா திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்திருக்கின்றேன்.

“மெட்ரோ ரயில் திட்டம் குறித்து கோரிக்கை”

கோவையில பாதாள சாக்கடை, குப்பை இல்லாத கோவை, ஸ்மார்ட்சிட்டி குளங்கள் பராமரிப்பு ஆகியவை குறித்தும் மனுவில் தெரிவித்து இருக்கின்றேன். மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கோரிக்கையே முதல் கோரிக்கையாக மனுவில் இருக்கின்றது. மெட்ரோ ரயில் குறித்து பல்வேறு ஆவணம் அரசு சார்பில் கொடுக்காமல் இருக்கிறது. அதை அவரது கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றேன்.

வானதி சீனிவாசன், முதல்வர் மு.க.ஸ்டாலின்

“கோவையில் சாலை பணிகளுக்காக 200 கோடி ஒதுக்கீடு”

விமான நிலைய விரவாக்கத்திற்கு நிலம் ஒப்படைத்து விட்டதாக முதல்வர் சொன்னார். ஒரு சிலர் இன்னும் அங்கு இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கின்றார். அதனால்தான் 95 சதவீத பணிகள் முடிந்து இருக்கின்றது என முதல்வர் சொல்லி இருக்கின்றார். கோவையில் சாலை பணிகளுக்காக கூடுதாக 200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கின்றனர். இந்த 200 கோடியாவது தரமான முறையில் சாலைகள் அமைக்க செலவிடப்பட வேண்டும்.

கோவை தெற்கு தொகுதியில் பல இடங்களில் பட்டா கிடைக்காமல் இருக்கின்றனர். கோவை வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்கள் தேவை” என்றார்.

“முதல்வர், பிரிவினைவாதம் பற்றி பேசாமல் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்”

தொடர்ந்து அவரிடம் ‘தெற்கால்தான் தற்பொழுது வடக்கு வாழ்கிறது’ என முதல்வர் பேசியிருப்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்...

“ஒரு குடும்பத்தில் வளர்ச்சி என்பதுதான் முக்கியம். முதல்வர் பிரிவினைவாதம் பேசாமல், மக்களை திசை திருப்பாமல் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.

cm stalin

“முதல்வர் கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026 தேர்தலில் தெரியும்”

கோவையில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் ஆகியோர் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு இருப்பதை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வரவேற்கின்றேன். அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரபடுத்த வேண்டும். அரசு துறையில் லஞ்சம் அதிகமாக இருக்கின்றது. கோவையை கவர முதல்வர் முயற்சி செய்கின்றார். கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026 தேர்தலில் தெரியும்” என தெரிவித்தார்.