மதுரை அழகர்கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றமுயன்றதாகக் கூறி அவர்களை பாஜகவினர் அகற்ற முயன்றதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பாஜக நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் இன்று காலைமுதல் நடைபெற்று வருகிறது. புதிய நிர்வாகிகள் நியமித்த பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இதில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜக அமைப்பு ரீதியாக மாவட்ட தலைவர்களை மாற்றி அமைத்து அறிவிப்பை வெளியிட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த வாரம் பாஜகவின் மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் பொது செயலாளர், மாநில செயலாளர்கள்., கட்சியின் பல்வேறு அணிகள் பிரிவுகளின் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அண்ணாமலை உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து இன்று மதுரையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ.விநாயகம், தேசிய செயற்க்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பாஜகவின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில அணி பிரிவு தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம், நடைபெற்று முடிந்த தேர்தல்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தையொட்டி அழகர்கோயிலில் சுமார் அரை கி.மீ தூரத்துக்கு பாஜக கட்சி சார்பாக போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. காவல்துறையிடம் முறையாக அனுமதிபெற்ற பாஜகவினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்த முயன்றதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் இதனையடுத்து தங்கள் கட்சி பேனர்களை அகற்றியதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் முயற்சியை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். தற்போது மாநகராட்சி ஊழியர்களிடம் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.