தமிழ்நாடு

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி - பாஜக நிர்வாகி கைது

webteam

மின்வாரியத்தில் வேலைவாங்கி தருவதாகக்கூறி 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த திருவெண்ணெய்நல்லூர் டி. புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சங்கரன் (பாஜக நிர்வாகி) என்பவரை கைது செய்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மின்சார வாரியத்தில் கேங்மேன் மற்றும் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாகக்கூறி, கடந்த 2019 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் கேங்மேன் மற்றும் உதவி மின் பொறியாளர் பணிகளுக்கு ஒரு நபருக்கு மூன்று லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் தங்கமயில் உள்ளிட்ட 58 நபர்களிடம் தங்கமயில் தந்தைக்கு நண்பரான திருவெண்ணைநல்லூர் டி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சங்கரன் வாங்கியுள்ளார். மேலும், தனக்கு அரசியல்வாதிகளிடம் நன்றாக பழக்கம் உள்ளதாக ஆசை வார்த்தை கூறி மொத்தம் 94,50,000 பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு வரை யாருக்கும் வேலை வாங்கித் தராததால் பணம் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டுவந்த நிலையில் 24 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை தவணை முறையில் செலுத்தியுள்ளார்.

மீதமுள்ள 70 லட்சத்தை தற்போது வரை திருப்பி தராத நிலையில் அவர் மீது தங்கமயில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில்  அரசு பள்ளி ஆசிரியர் சங்கரன் இன்று கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் சங்கரன் பாஜகவில் மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.