இன்னொரு மொழி தெரியாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன் எனவும் இன்னொரு மொழி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது எனவும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர்கள் பிரிவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய மாநில பாஜக தலைவர் எல்.முருகன், “வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற்றக் கூடியதாக தேசிய கல்விக் கொள்கை உள்ளது. அண்டை மாநிலங்களில் மும்மொழி கொள்கை உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் மற்றொரு மொழி கற்பிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இன்னொரு மொழி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அரசியலாக்குகின்றனர். இன்னொரு மொழி தெரியாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன்.
வரும் காலம் பா.ஜ. கட்சியின் காலம். ரொம்ப தூரத்தில் இல்லை. நாம் சட்டசபையில் அமர்வது நிச்சயம். நமது எம்.எல்.ஏ.க்கள் கோட்டையை அலங்கரிப்பார்கள். அதுவரை எனக்கு ஓய்வில்லை” எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை கட்சியில் சேர்த்தது தங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.