செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
சென்னை அம்பத்தூரில் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நாடாளுமன்ற நிலைபாடு அறிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று, கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சாசனம் எனும் கோரிக்கை நூலை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து நிகழ்சியில் பேசிய திருமாவளவன்,
"நாட்டில் வலதுசாரிகள் வலிமை பெற்று வருகின்றனர். இது நாட்டிற்கும் ஜனனாயகத்திற்கும் பேராபத்து. இவர்கள் மதத்தையும் மத உணர்வையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றனர். சாதிய வாக்கு வங்கி எனும் பல்வேறு அவதாரங்களில் அவர்கள் மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது இறுதி இலக்கை எட்டவில்லை. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என கூறினார். ஆனால், வேலையின்மைதான் அதிகரித்துள்ளது.
மோடி இதுவரை வளர்ச்சி பற்றி பேசியதே இல்லை. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக இவற்றை பற்றி பேசிதான் வாக்கு கேட்கிறார். தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேறிவிட்டது என மோடியால் பேச முடியுமா?. கடந்த மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை கார்பரேட் தான் வளர்ச்சி எட்டியுள்ளது .இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.
இப்பொழுது நடக்கக் கூடிய தேர்தல் காங்கிரஸ் - பிஜேபி ,பிஜேபி - திமுக இடையேயான தேர்தல் அல்ல, கருத்தியல் யுத்தம், மக்களுக்கும் - சங்கபரிவார்களுகும் இடையே நடக்கக் கூடிய போர். இதில், அவர்களை தோற்கடிப்போம்"
என்று பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்...
"தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் பேரதரவை நல்க காத்திருக்கிறார்கள். டெல்லியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது. சிதம்பரம் தொகுதியில் வரும் 25 ஆம் தேதி முதல் தான் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாகவும் 27 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.
முதல்வர்களை கைது செய்யும் புதிய நடைமுறையை அரசியலில் பாஜக கையாண்டு வருகிறது. பழிவாங்கும் வெறியோடு பாஜக செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பாஜக தோல்வி பயத்தில் இது போன்று செய்து வருகிறது. திமுக கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது, திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த முறை 40-க்கு 40-தையும் வெல்வோம். தேர்தல் முடிவுகள் வரும்போது, பாஜகவிற்கு மக்கள் எவ்வளவு மதிப்பெண் போடப் போகிறார்கள் என்பது தெரியவரும்” என தெரிவித்தார்.