தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக்குள் பாஜக; 15 ஆண்டுகளுக்குப் பிறகு விசிக

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக்குள் பாஜக; 15 ஆண்டுகளுக்குப் பிறகு விசிக

sharpana

தமிழக சட்டப்பேரவைக்குள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவும், 15 ஆண்டுகளுக்குப்பிறகு விசிகவும் நுழையவிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து பாஜக தமிழக சட்டப்பேரவையில் நுழையவிருக்கிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக மயிலாடுதுறை, தளி, காரைக்குடி, மயிலாப்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பிறகு, நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தனித்தே போட்டியிட்ட பாஜக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் அதிக வாக்கு விதிதியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். அவரது வெற்றி உறுதியாகியுள்ளது.

அதேபோல, விசிக கடந்த 2006 ஆம் ஆண்டு கடைசியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. 2006 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட விசிகவில் காட்டு மன்னார்குடி தொகுதியில் ரவிக்குமாரும், மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகையும் வெற்றிபெற்றனர். அதன்பிறகு, நடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியிலும், 2016 ஆம் ஆண்டு மக்கள்நல கூட்டணியிலும் போட்டியிட்டு விசிக தோல்வியடைந்தது. இந்நிலையில், தற்போது 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதில் நாகை தொகுதியில் ஆளூர் ஷாநவாஸ், செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு, காட்டுமன்னார்கோவில் சிந்தனை செல்வன், திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி வெற்றி பெற்றனர். இதன் மூலம் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழையவிருக்கிறது.