செய்தியாளர்: இஸ்மாயில்
காஞ்சிபுரம் அருகே நல்லூர் பகுதியில் ஸ்ரீ சங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ டிரஸ்ட் மூலம் சங்கரா மகளிர் செவிலியர் கல்லூரியின் புதிய கல்லூரி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்... “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றத்தின் கெடுபிடி அதிகம் உள்ளது. குறிப்பாக கையெழுத்து போடக்கூடாது, தலைமைச் செயலகத்திற்கு போகக்கூடாது என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
தமிழ்ச் சமுதாயம் மிக மிக சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காரணம் திராவிட கட்சிகள்தான். 2000 கோடி 3000 கோடி ரூபாய்க்கு போதைப் பொருட்களை கடத்துபவர்களாக திமுக நிர்வாகிகள் உள்ளனர். உதாரணத்துக்கு 70 கோடிக்கு போதைப் பொருள் கடத்துபவர் ராமநாதபுரத்தில் திமுக நிர்வாகி, அதே போல புதுக்கோட்டை சுந்தர பாண்டியன்... என்றெல்லாம் உள்ளனர். ஆகவே திராவிட முன்னேற்ற கழகம் போதை கடத்துவோர் அணி என்ற ஒரு அணியை வைத்துக் கொள்ளும் அளவிற்கு மோசமாக இருக்கிறது.
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பில்லு கேட்டால் அடிக்கிற ஒரு கட்சி, யாரோ ஒருவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதற்காக என்ன பாடுபடுத்துகிறார்கள் என்று பாருங்கள். இதிலிருந்தே தெரியவில்லையா திமுக ஆட்சி செய்ய தகுதி இல்லாத ஒரு கட்சி என்று! வரும் சட்டமன்ற தேர்தலில் 200, 300 இல்லை... 20 அல்லது 30-ஆவது ஜெயிக்கிறார்களா என்று பார்ப்போம்.
திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது ரொம்ப நியாயம். ஏனென்று சொன்னால் கூட்டணி அரசு வெற்றி பெறாது என்பதே ஒரு மாயை. கூட்டணி ஆட்சியில் ஐந்தாண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சி நடத்தியவர் வாஜ்பாய், அப்போது எங்களுக்கு 180 இடங்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகு அதேபோல 2014, 2019 ஆகிய இரண்டு தேர்தலிலும் பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் அங்கமாக வைத்துக் கொண்டது பாஜக.
தேர்தலில்போது ஒருவர் பெயரை கூறி, அவர் படத்தை போட்டு ஓட்டு கேட்பீர்கள். ஆனால், அவரை மந்திரி சபையில் உள்ளே நுழைய விட மாட்டீர்களா? ஆகவே, திருமாவளவன் முன்வைப்பது ஒரு நியாயமான கோரிக்கை. அவரது நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சி 100 சதவீதம் ஆதரிக்கிறது” என்றார்.