தமிழ்நாடு

இபிஎஸ் படம் எரிப்பு விவகாரம்: இரவில் நீக்கப்பட்டு அதிகாலையில் சேர்க்கப்பட்ட பாஜக நிர்வாகி!

இபிஎஸ் படம் எரிப்பு விவகாரம்: இரவில் நீக்கப்பட்டு அதிகாலையில் சேர்க்கப்பட்ட பாஜக நிர்வாகி!

webteam

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரித்த பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நேற்று இரவு தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விளக்கு அருகே பா.ஜ.க வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் பாஜக-வினர் சிலர் கடந்த 7 ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் காவல்நிலைய ஜாமீனில் அவர்க விடுதலை செய்தனர்.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு எடப்பாடி பழனிசாமி படத்தை எரித்தவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், கோவிபட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ உட்பட அதிமுகவினர் பலரும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தினேஷ் ரோடி கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட தலைவர் வெங்கேடசன் சென்னகேசவன் நேற்று இரவு தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் நிலைபாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் தினேஷ் ரோடு வகிக்கும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பாலகணபதி, இன்று அதிகாலை மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினேஷ் ரோடியை அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள், தினேஷ் ரோடியை மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து 6 மாத காலம் விடுவிக்கப்படுகிறார் என்று வெளியிட்ட அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட தலைவர் ஒரு நடவடிக்கை எடுத்துவிட்டு, பின் காலையிலேஎயே மாநில பொதுச்செயலாளர் வேறொரு நடவடிக்கை எடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கூட்டணியிலுள்ள அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் உருவப்படட்தை எரித்தவர் மீதான நடவடிக்கையில் மாறுபட்ட நிலைபாடுகளுடன் பாஜக இருப்பது, கூடுதல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.