தமிழ்நாடு

‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!

‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!

Sinekadhara

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பல்வேறு நலத்திட்ட தொடங்கிவைக்கும் தொடக்கவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் பேசியபோது பாஜகவினர் அதற்கு எதிர்ப்புக்கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு திமுகவினர் எதிர்க்கோஷம் எழுப்பியதால் அரங்கமே அதிர்ந்தது.

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை புரிந்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர், ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில் முதலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார்.

அப்போது அவர் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார். அவர் பேசியபோது அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரங்கத்திலிருந்த பாஜகவினர் ’பாரத் மாதா கி ஜே’ கோஷம் என எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கிருந்த திமுகவினர் கலைஞர் வாழ்க என கோஷமிட்டனர். இப்படி மாறிமாறி பாஜகவினரும், திமுகவினரும் கோஷமிட்டது அரங்கையே அதிரவைத்தது.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தில் நடைபெற்று வருவது திராவிட மாடல் ஆட்சி என்று பேசினார். தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு செலுத்தும் வரி அளவிற்கும், தமிழகம் பெறும் வரிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார். கச்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட வேண்டும், ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும், தமிழை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். முடிக்கும் போது உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் பேசி முடித்தார்.