குளித்தலை அருகே மயிலாடி வாய்க்கால் பாலம் அருகே வீட்டினுள் நுழைந்த பாம்பினை பிடிக்க சென்றவரை பாம்பு கடித்ததில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து பாம்பினை பிடித்துச் சென்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மையிலாடி இரட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் முட்புதர்களுக்கு இடையே முத்துவீரன் என்பவரது வீடு உள்ளது, இந்நிலையில் இன்று வீட்டினுள் பெரிய சாரப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது, அப்போது வீட்டின் உள்ளே இருந்த பாம்பை பார்ப்பதற்கு, சத்தியமங்கலம் குண்டாங்கல் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (23) என்பவர் சென்றுள்ளார்.
அப்போது கதவோரம் இருந்த பாம்பு அவரின் காலில் கடித்து விட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்துள்ளனர், இதைத்தொடர்ந்து அந்த பாம்பை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்ததால் முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில் தீயணைப்புத் துறையினர் வீட்டினுள் சென்று உள்ளே இருந்த பாம்பை கொக்கி மூலம் லாவகமாக பிடித்தனர், இதையடுத்து ஆறடி நீளம் இருந்த சாரப்பாம்பை முசிறி பகுதி தும்பலம் வனத்தில் விடுவதற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.