ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து மத்திய அரசின் மிருகவதைத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது.
இந்த அவசரச் சட்டத்தினை சட்டமாக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதாவினை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார். விவாதத்துக்குப் பின்னர் இந்த சட்டமசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் நிலையில் சட்டமாக அமலாகும்.