தமிழ்நாடு

வரலாற்றில் 21-வது முறை... பவானி சாகர் அணை நீர்மட்டத்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வரலாற்றில் 21-வது முறை... பவானி சாகர் அணை நீர்மட்டத்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

webteam

வரலாற்றில் 21-வது முறையாக 102 அடியை எட்ட உள்ளது பவானிசாகர் அணை.

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பொழிந்து வரும் தொடர்மழையால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 101.88 அடியை எட்டியுள்ளதால் பவானிசாகர் அணையின் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. கொடநாடு, கூடலூர் ஆகிய இடங்களில் பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக மாயாற்றில் உருவெடுத்து பவானிசாகர் அணையில் கலக்கிறது. பவானி ஆறும், மாயாறும் பவானிசாகர் அணையில் கலப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக கடந்த ஜூலை 4ம் தேதி 83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 101.88 அடியாக உயர்ந்துள்ளது. அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் பொதுப்பணித்துறை விதிகளின்படி 102 அடிக்கு மேல் வரும் வெள்ளத்தை தேக்கி வைக்க இயலாது என்பதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படிய பவானிஆற்றில் திறந்துவிடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.89 அடியாகவும், நேற்று இரவு 11 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 2,450 இல் இருந்து 6,779 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 105 கனஅடியாகவும் நீர் இருப்பு 30.19 டிஎம்சியாகவும் (மொத்தம் 32.8 டிஎம்சி) உள்ளது. பவானிசாகர் அணை நிரம்பினால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் பவானிகூடுதுறையில் கலப்பதால் ஏற்கனவே காவிரியில் ஓடும் 2 லட்சம் கனஅடிநீருடம் சேரும்போது மேலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.