தமிழ்நாடு

லஞ்ச பணத்தை காசோலையாக துணைவேந்தர் பெற்றது ஏன்?

லஞ்ச பணத்தை காசோலையாக துணைவேந்தர் பெற்றது ஏன்?

webteam

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்சப்பணமாக அவர் காசோலைகளை பெற்றது ஏன் என்பது பல தரப்பிலும் எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் என்ற பேராசிரியரின் பணி நியமனத்திற்கு 30 ‌லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் ஒரு லட்ச ரூபாய் பணமாகவும், 29 லட்சத்திற்கு காசோலையாகவும் லஞ்சம் கேட்ட புகாரில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கணபதி மற்றும் வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் ஆகிய இருவரும் பிடிபட்டனர். சுரேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்தனுப்பிய ரசாயனம் கலந்த 28 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும், மீதி பணம் உட்பட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.லஞ்சப்பணம் தர பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் வலியுறுத்திய ஒளி, ஒலிப்பதிவு ஆதாரங்களைக்கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணபதி லஞ்சப்பணமாக காசோலைகளை பெற்றது ஏன் என்பது பல தரப்பிலும் எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது. காசோலை எனில் அதனை பணமாக மாற்ற வங்கியை நாட வேண்டும், வங்கிக்கணக்கில் வந்தால் அதற்கு கணக்கு காட்ட வேண்டிய நிலையும் ஏற்படும் எனில் கணபதி, காசோலையாக வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு லட்சம் ரொக்கம் போக, எஞ்சிய 29 லட்சம் ரூபாய்க்கு காசோலைகளை பெற்றுக்கொண்டு அதனை பிணையாக வைத்துக்கொண்டு சுரேஷ் லஞ்சத்தொகையை தரத்தர, காசோலையை திருப்பித்தருவதற்காகவே பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த காசோலைகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் இதுவரை கைப்பற்றவில்லை.

ராசாயனம் தடவிய நோட்டுகளை தங்கள் ஆடைக்குள் வைத்து எடுத்துச்சென்று கணபதியும், அவரது மனைவி ஸ்வர்ணலதாவும் கிழித்துப்போட்டதால், அவர்களின் கைகளை கழுவி அந்தத் தண்ணீரை ‌நான்கு பாட்டில்களில் சேகரித்துள்ளனர். அவர்களின் ஆடைகளும் ‌ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் கணபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ள 82 பேரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஜாமீன் கோரி துணைவேந்தர் கணபதி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.