திருச்சியில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கழிவறையில் ஆண்களுக்கான பகுதியில் பாரதியார் படம் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அப்படம் நீக்கப்பட்டது
திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் எதிரில் ஸ்மார்ட் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலும், தமிழகத்திலும் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் டாய்லெட், 8 அடிநீளம், 7 அடி அகலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா, வண்ண விளக்குகள், அரைமணி நேரத்துக்கு ஒருமுறை தானாகவே சுத்தம் செய்யும் செய்யும் தானியங்கி கருவி, கழிவறை சேதப்படுத்தப்பட்டால் உடனடியாக பொறியாளருக்கு தெரியப்படுத்தும் சென்சார் அலாரம் என சிறப்பம்சங்கள் இந்த கழிவறையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவறை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிலையில், இக்கழிவறையில் ஆண்களுக்கான பகுதியில் பாரதியாரின் பாதி முகம் தெரிவது போல புகைப்படம் இடம்பெற்றிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகப் புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் இழிவுப்படுத்தப்பட்டதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அது பாரதியாரின் புகைப்படம் இல்லை என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அது பாரதியாரை குறிக்கும் புகைப்படம் தான் என தொடர்ந்து எதிர்ப்பு எழுந்ததை அடுத்து திருச்சி மாநகராட்சி அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்கினர்.