பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் இன்று காலை ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கார்த்திகை விழாவின் போது மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம், திருவண்ணாமலை கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தின மும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவின் ஆறாம் நாளான 19ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 20ஆம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, உண் ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.