பகத் வீர அருண் pt web
தமிழ்நாடு

EXCLUSIVE | “கடல் வாங்கிக் கொண்டதால் மட்டுமே உயிர்தப்பினோம்” - எண்ணூர் பகத்வீர அருண்

“வெளியான அமோனியாவில் பெரும்பகுதியை கடல் வாங்கிக்கொண்டதால் மக்கள் உயிர் தப்பினர். இல்லாவிட்டால் பெரும் உயிர் இழப்புகளை எண்ணூர் மக்கள் சந்தித்து இருப்போம். உயிர் சேதம் ஏற்பட்டால்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா?” - பகத் வீர அருண்

சண்முகப் பிரியா . செ

சென்னை, எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ளது கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் உர உற்பத்தி ஆலை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இரவு 11.30 மணியளவில் கோரமண்டல் உரத்தொழிற்சாலையிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டது. கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்து காற்றில் கலந்தது.

அமோனியாவை சுவாசித்த மக்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம், மூச்சுக்கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் கொதித்தெழுந்த மக்கள் டிசம்பர் 27-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் விசாரணை நடத்திய நிலையில், கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. இதனிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து அந்த வழக்கை விசாரித்தது.

அமோனியா கசிவு குறித்த தகவல் கிடைத்தவுடன், கோரமண்டல் ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று கசிவை சரி செய்துவிட்டதாக கோரமண்டல் ஆலை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக கோரமண்டல் நிறுவனத்தில் செய்யப்பட்ட சோதனையில், ஆலையின் வளாகத்தில் 400 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய அமோனியா 2090 கிராமாக இருந்தது. அதாவது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அமோனியா காற்றில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடல் நீரில் லிட்டருக்கு 5 மி.கி இருக்க வேண்டிய அமோனியா 49 மி.கி என இருந்துள்ளது. இதனால் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை பயன்படுத்த வேண்டும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அமோனியா கசிவுக்கான காரணத்தை கண்டறிய தொழில்நுட்பக் குழுவை மாநில அரசு கடந்த டிசம்பர்-26 ஆம் தேதி அமைத்தது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் நடந்துவரும் வழக்கில் கடந்த 5 ஆம் தேதி (05/02/24) நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில், கோரமண்டல் நிறுவனம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதே விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது கடந்த 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியம் எடுத்து சென்றதே கசிவுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலின் போது கனமான கிரானைட் பாறைகள் கணிசமான இடமாறியதால் குழாயில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தற்போதைய ஆஃப்ஷோர் பைப்லைனுக்கு பதிலாக தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு அமைப்புடன் புதிய பைப்லைனை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் கடல் நீரில் இருந்து வெளியேறி சாலையை கடந்து ஆலைக்கு செல்லும் இடத்தில் பைப்லைன் முறையாக பாதுகாக்கப்படவில்லை எனவும் பைப்லைன் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே, அமோனியாவை குழாய்க்கு மாற்ற வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் TNPCB க்கு சூழலியல் பாதிப்பு இழப்பீடாக ₹5.92 கோடி வழங்கவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. தொழில்நுட்பக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (டிஎன்பிசிபி) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் புதியதலைமுறை சார்பாக எண்ணூர் மக்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் பகத் வீர அருண் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அவர் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுப் பேசினார். அதில், “குழாய் வெடிப்பின் போது 67.638 டன் அளவிலான அமோனியா வெளியேறிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலைக்குள் பாதுகாப்பு (on-site emergency preparedness plan) தொடர்பான திட்டங்களை செய்துள்ளார்கள். ஆனால் ஆலைக்கு வெளியே பாதுகாப்பு தொடர்பான திட்டம் (off-site emergency preparedness plan) பற்றி தெளிவாக அறிக்கையில் இல்லை.

மிக்ஜாம் புயலின் காரணமாகதான் கரையில் பாறைகள் உருண்டு குழாய் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். குழாய் பாதிக்கப்பட்டுள்ளது என்பது டிச-23 ஆம் தேதியே ஆய்வின் போது ஆலைக்கு தெரிந்துள்ளது. தெரிந்தும் கப்பலில் இருந்து அமோனியா ஏற்றுவதற்காக pre-cooling வேலையை செய்துள்ளனர். pre-cooling செய்ய நைட்ரஜன்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அமோனியாவையே பயன்படுத்தி உள்ளனர். அது அறிக்கையிலும் உறுதியாகியுள்ளது.

அதுமட்டுமல்ல ஆலையில் அமோனியா கசிவை கண்காணிக்க பொருத்தப்பட்டிருந்த 19 சென்சார்களும் வேலை செய்யவில்லை. இவ்வளவு நாள் எண்ணூரில் தொழிற்சாலைகள் நடத்திய அத்துமீறல்களை கண்டுக்கொள்ளமால் இருந்தனர். இந்த அமோனியா கசிவு பிரச்னையிலும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் அமைதி காத்தது. மக்களின் தொடர் போராட்டம் கொடுத்த அழுத்தத்தால்தான் ஓரளவுக்காவது தவறுகளை சூட்டிக்காட்டும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக நினைக்கிறோம்.

பகத் வீர அருண்

வெளியான அமோனியாவில் பெரும்பகுதியை கடல் வாங்கிக்கொண்டதால் மக்கள் உயிர் தப்பினர். இல்லாவிட்டால் பெரும் உயிர் இழப்புகளை எண்ணூர் மக்கள் சந்தித்து இருப்போம். உயிர் சேதம் ஏற்பட்டால்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா? அமோனியா கசிவு ஏற்படும்வரை எந்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் ஒரு நிறுவணம் இயங்கிகொண்டிருந்தது எவ்வளவு பெரிய தவறு? வாயு கசிந்தும் கூட நிறுவனத்தின் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களை எச்சரிக்க அபாய ஒளி கூட எழுப்பபடவில்லை. இந்த தவறுகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமா? மக்கள் களத்தில் இன்னும் தீவிரமாகவும் உள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் சுமார் 8000 மக்கள் 12 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அடிப்படையாக செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளையே இதுவரை இந்நிறுவனம் செய்யவில்லை. மொத்தத்தில் உள்ளூர் மக்களின் உயிருக்கோ, சூழலுக்கோ எவ்வித மதிப்பையும் கோரமண்டல் நிறுவனம் தரவில்லை என்பது இந்த அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.

ஆகவே அந்நிறுவனத்தை இழுத்து மூடுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். தமிழ்நாடு அரசு கோரமண்டல் ஆலையை இழுத்து மூட வேண்டும். அதுவே அரசிடம் எண்ணூர் மக்கள் முன் வைக்கும் கோரிக்கை” என்று கூறினார்.